Sunday, February 21, 2016

கத்தி

உன் கையில் இருக்கும் கத்தி
அழகானது!
அதை நீ கையாளும் லாவகம்
அதை விட அழகானது!
மெலிதாய்.. மிக மெலிதாய்
என் முகமெங்கும் கோடுகள் இடுகிறாய்!
துளிர்க்கும் ரத்தத்தை சுவைத்து
முத்தம் என்கிறாய்!
மயங்குகிறேன் நான்!
மயக்கத்தின் நடுவே
கண்ணாடியில் முகம் பார்த்து அலறுகிறேன்!
என் பிம்பம் தெரிந்த கண்ணாடியை உடைக்கிறாய்!
என் முகத்தில் தெரியும் கோடுகள்
கண்ணாடியின் கீறல்கள் என்கிறாய்!
நம்பி புன்னகைக்கிறேன்!
முகத்தில் முடிந்தது வேலையென
ஒரு மருத்துவரின் நுட்பத்துடன்
கத்தியை இதயத்தில் நுழைக்கிறாய்!
அந்த வலியை சுகிக்கவும்
கற்றுக் கொடுக்கிறாய்!
மெது மெதுவாய் ஆழ இறங்குகிறது...
இதயத்தின் மறு எல்லையை தொட்டவுடன்
அப்படியே சுழற்றி உருவுகிறாய்!
பீறிட்டுத் தெறிக்கும் என் ரத்தத்திற்கு நடுவே
புன்னகையுடன் மரிக்கிறேன் நான்!
ஒரு துளி ரத்தமும் மேலே படாமல்
புனிதனாக நிற்கிறாய் நீ!

No comments:

Post a Comment