Friday, September 16, 2016

மிருகம்!

எதிர்பாராத நொடியில்
கொடும் மிருகமாய்
பாய்ந்து தாக்கி
அதிர்ச்சி அளித்து
கண்ணீரில் கரைத்து
ஆதங்கம்
வலி
இயலாமை
ஏமாற்றம்
கோபம்
எல்லாம் தந்து
சிந்திக்கவும் இடம் கொடாமல்
இறுக்கும்
சாவு ...
முதல் பசி
தீண்டும் நொடியில்
காற்றில் கரைந்து
காணாமலேயே போகிறது!

Wednesday, August 3, 2016

கண்ணாடி

அது ஒரு
அழகிய கண்ணாடி!
விசித்திரமானதும் கூட!
நான் சிரித்தால் சிரிக்கும்!
அழுதாலும் சிரிக்கும்!
என் முகத்தில்
என்றும் மகிழ்ச்சியை மட்டுமே
காட்ட விரும்பும்!
அதனாலேயே எனக்கு அதை
மிகவும் பிடிக்கும்!
அதையே சுற்றி வருவேன்!
அது காட்டுவது மட்டுமே
உண்மை என நம்பினேன்!
அதுவும் என் கை கோர்த்து
சுற்றித் திரிந்தது!
உலகை அது பார்த்தது!
நான் அதை மட்டுமே பார்த்தேன்!
அதை கடந்து
ஓர் உலகு இருப்பதை
மறந்தே போனேன்...
இருவரும் ஒரு நாள்
புதைக் குழியில் விழுந்து கிடக்கும் வரை!
அப்பவும் நம்பினேன்
கண்ணாடி கெடுதல் செய்யாதென..!
மூச்சு முட்டியது!
அய்யோ என் கண்ணாடியும் மூழ்குதே...
தவித்தேன்..!
அதை காப்பாற்றும் வேகத்தில்
நானும் வெளியேறி
அதையும் இழுத்து வெளியே போட்டேன்!
உடைந்து நொறுங்கியது..!
ஒவ்வொரு சில்லாய்
ஓடி பொறுக்கினேன்!
குத்தி கிழித்தது!
பொறுத்துக் கொண்டேன்..!
காயங்கள் அதிகமாயின..!
ஆனாலும் தொடர்ந்தேன்..!
ஒரு கட்டத்தில்...
ரணத்தின் வலி பொறுக்க முடியாமல்
போதுமென நிறுத்தினேன்..!
எதிர்பாராத ஒரு நொடியில்
முழு வடிவம் பெற்று
சிரித்தது கண்ணாடி..!
ஆறாத காயங்களின் வலி ஒரு புறம்
மீண்டும் உடைந்து விடுமோ
என்ற பதட்டம் மறுபுறம் என
என் சிரிப்பை எல்லாம்
வழித்து துடைத்து
தின்று செரித்தது அறியாமலேயே
மகிழ்ச்சியாய்
சிரிக்கிறது கண்ணாடி!
அதன் பிரதிபலிப்பாய்
உயிரற்று சிரித்து
கண்ணாடியின் கண்ணாடியாய்
மாறிப் போனேன் நான்!

Sunday, February 21, 2016

கத்தி

உன் கையில் இருக்கும் கத்தி
அழகானது!
அதை நீ கையாளும் லாவகம்
அதை விட அழகானது!
மெலிதாய்.. மிக மெலிதாய்
என் முகமெங்கும் கோடுகள் இடுகிறாய்!
துளிர்க்கும் ரத்தத்தை சுவைத்து
முத்தம் என்கிறாய்!
மயங்குகிறேன் நான்!
மயக்கத்தின் நடுவே
கண்ணாடியில் முகம் பார்த்து அலறுகிறேன்!
என் பிம்பம் தெரிந்த கண்ணாடியை உடைக்கிறாய்!
என் முகத்தில் தெரியும் கோடுகள்
கண்ணாடியின் கீறல்கள் என்கிறாய்!
நம்பி புன்னகைக்கிறேன்!
முகத்தில் முடிந்தது வேலையென
ஒரு மருத்துவரின் நுட்பத்துடன்
கத்தியை இதயத்தில் நுழைக்கிறாய்!
அந்த வலியை சுகிக்கவும்
கற்றுக் கொடுக்கிறாய்!
மெது மெதுவாய் ஆழ இறங்குகிறது...
இதயத்தின் மறு எல்லையை தொட்டவுடன்
அப்படியே சுழற்றி உருவுகிறாய்!
பீறிட்டுத் தெறிக்கும் என் ரத்தத்திற்கு நடுவே
புன்னகையுடன் மரிக்கிறேன் நான்!
ஒரு துளி ரத்தமும் மேலே படாமல்
புனிதனாக நிற்கிறாய் நீ!

பொழிய தயாரா வான்?

வரண்ட பாலையாய்
வெடித்த நிலத்தில்
விழும் துளிகளை
நொடியில் விழுங்கி
இன்னும் இன்னும் என
பார்த்து நிற்கிறது நிலம்!
தூறல்களை
அவசரமாய் இழுத்து
தனக்குள் அமிழ்த்துகிறது!
ஆனாலும் மறையவில்லை
வெடிப்புகள்!
கொட்டும் மழையை
வாரி அணைத்து
சற்றே சிரிக்கிறது!
சிரிப்பை கண்டு
மழை நிற்க
எட்டிப் பார்க்கும்
கீற்று வெயிலும்
அனைத்தையும்
ஒன்றுமற்றதாக்க
மீண்டும் வெடிக்கிறது நிலம்!
வெடிப்பை மறைக்க
பெய்கிறது மழை!
மழையை காணவே
வெடிக்கிறது நிலம்!
நிற்காமல் பெய்யும் மழையும்
பிரவாகமாய் பொங்கும் வெள்ளமும்
தரக்கூடும்
நிரந்தரப் புன்னகையை!
பொழிய தயாரா வான்?

நிலவு... என் உற்றத் தோழி...

பொழிவதும் மறைவதும்
நம் உறவில்
புதிதல்லதான்!
முகம் முழுதும் விகசிக்க
நீ பொழிவதை
பரவசத்துடன்
ஏற்க தெரிந்த மனதிற்கு
நீ மறைவதும் இயல்பென்பது
புரியாமல் இல்லை..
எனினும்
பேராசை கொண்ட மனம்...
நீ வீசும்
அரைப் புன்னகை
கால் புன்னகையைக் கூட
விடாமல் சேகரித்து
பொத்தி வைக்கும் மனம்...
வெறுமையும் தனிமையும் தந்துவிட்டு
நீ மறைவதை..
இயலா கோபத்துடன்
வெறித்து நிற்கிறது..
நீயாய் என்ன மறைவது?
ஆத்திரத்துடன்
மேகப் போர்வை இழுத்து
உன்னை மறைத்தது மனது..
நில்லாமல் கொட்டியது மனமழை..
எனக்கு மறைந்து
எங்கோ யாருக்கோ
நீ பொழிவதும் மறைவதுமாய்
விளையாடிக் கொண்டுதான் இருக்கிறாய்!
ஆத்திரம் வடிந்து ஒருநாள்
நான் போர்வை விலக்கி எட்டிப் பார்க்கலாம்...
அந்நாளில்
சட்டென நிற்கும் மனமழை!
மாறாப் புன்னகையுடன் நீயும் நிற்பாய்!
பொழிவதும் மறைவதுமாய்
தொடரும் நம் உறவு!