Tuesday, January 1, 2013

கடலை நோக்கி...

ஆரவாரமாய்
துள்ளி குதித்தோடி
கவனமின்றி
பேரிரைச்சலோடு
பெரும் பள்ளத்தில் விழுந்து
காயம்பட்டு
உருண்டு, புரண்டு
தட்டுத் தடுமாறி எழுந்து
தெளிந்து
ஓடத் தொடங்கிய ஆற்றின் மீது
கல் எறிந்து
கிளறி
குழப்பி
இறுதியில்
கழிவையும் கலந்தாய்!
அந்த இழிவையும்
கழிவையும்
கூடுதலாய்
ஆறா ரணத்தையும்
சுமந்து கொண்டும்
நில்லாமல்
ஓடிக் கொண்டே இருக்கிறது
ஆறு!
இன்னும் வேகமாய்...
கடலை நோக்கி!

ஒவ்வொரு முறையும் புதுசாய் ....

விதை விழும் போது சிலிர்த்து
நாற்றாய் பெருத்து
பெருமிதம் விளைந்து
பூரிப்பில் மணியாய் குலுங்கி
அறுபட்டு
அனைத்தும் தொலைத்து
காய்ந்து
மழை வாங்கி
ஈரம் பூத்து
மீண்டும் 
விதை வாங்க தயாராய்
புதுசாய் சிரித்து நிற்குது மனசு!