Sunday, February 21, 2016

நிலவு... என் உற்றத் தோழி...

பொழிவதும் மறைவதும்
நம் உறவில்
புதிதல்லதான்!
முகம் முழுதும் விகசிக்க
நீ பொழிவதை
பரவசத்துடன்
ஏற்க தெரிந்த மனதிற்கு
நீ மறைவதும் இயல்பென்பது
புரியாமல் இல்லை..
எனினும்
பேராசை கொண்ட மனம்...
நீ வீசும்
அரைப் புன்னகை
கால் புன்னகையைக் கூட
விடாமல் சேகரித்து
பொத்தி வைக்கும் மனம்...
வெறுமையும் தனிமையும் தந்துவிட்டு
நீ மறைவதை..
இயலா கோபத்துடன்
வெறித்து நிற்கிறது..
நீயாய் என்ன மறைவது?
ஆத்திரத்துடன்
மேகப் போர்வை இழுத்து
உன்னை மறைத்தது மனது..
நில்லாமல் கொட்டியது மனமழை..
எனக்கு மறைந்து
எங்கோ யாருக்கோ
நீ பொழிவதும் மறைவதுமாய்
விளையாடிக் கொண்டுதான் இருக்கிறாய்!
ஆத்திரம் வடிந்து ஒருநாள்
நான் போர்வை விலக்கி எட்டிப் பார்க்கலாம்...
அந்நாளில்
சட்டென நிற்கும் மனமழை!
மாறாப் புன்னகையுடன் நீயும் நிற்பாய்!
பொழிவதும் மறைவதுமாய்
தொடரும் நம் உறவு!

No comments:

Post a Comment