Tuesday, March 19, 2013

உயிர்ப்பூ

சுற்றிலும் எல்லாம்
உயிர்ப்புடன் இருக்கும் பொழுதே
ஏதோ ஒன்று செத்து விழுகிறது..
நொடியும் மாறவில்லை
மற்றவற்றின் இயக்கம்..
செத்து விழுந்தவற்றிற்காய் துடிப்பதா..
இயக்கத்தைத் தொடர்வதா
என ஊசலாடும் ஒரு சில..
இயங்கிய போதும்
உள்ளுக்குள் செத்து போனவை
இன்னும் சில..
இயங்காவிட்டால் செத்து விடுவோம்
என்ற அச்சத்தில் பல..
ஒவ்வொரு நொடியும் சாவை
சலனமின்றி கடந்து
உயிர்ப்புடன் இயங்குது உலகம்!
கடக்க முடியாது
தேங்கி நிற்கிறது மனம்!

Tuesday, January 1, 2013

கடலை நோக்கி...

ஆரவாரமாய்
துள்ளி குதித்தோடி
கவனமின்றி
பேரிரைச்சலோடு
பெரும் பள்ளத்தில் விழுந்து
காயம்பட்டு
உருண்டு, புரண்டு
தட்டுத் தடுமாறி எழுந்து
தெளிந்து
ஓடத் தொடங்கிய ஆற்றின் மீது
கல் எறிந்து
கிளறி
குழப்பி
இறுதியில்
கழிவையும் கலந்தாய்!
அந்த இழிவையும்
கழிவையும்
கூடுதலாய்
ஆறா ரணத்தையும்
சுமந்து கொண்டும்
நில்லாமல்
ஓடிக் கொண்டே இருக்கிறது
ஆறு!
இன்னும் வேகமாய்...
கடலை நோக்கி!

ஒவ்வொரு முறையும் புதுசாய் ....

விதை விழும் போது சிலிர்த்து
நாற்றாய் பெருத்து
பெருமிதம் விளைந்து
பூரிப்பில் மணியாய் குலுங்கி
அறுபட்டு
அனைத்தும் தொலைத்து
காய்ந்து
மழை வாங்கி
ஈரம் பூத்து
மீண்டும் 
விதை வாங்க தயாராய்
புதுசாய் சிரித்து நிற்குது மனசு!