Wednesday, August 3, 2016

கண்ணாடி

அது ஒரு
அழகிய கண்ணாடி!
விசித்திரமானதும் கூட!
நான் சிரித்தால் சிரிக்கும்!
அழுதாலும் சிரிக்கும்!
என் முகத்தில்
என்றும் மகிழ்ச்சியை மட்டுமே
காட்ட விரும்பும்!
அதனாலேயே எனக்கு அதை
மிகவும் பிடிக்கும்!
அதையே சுற்றி வருவேன்!
அது காட்டுவது மட்டுமே
உண்மை என நம்பினேன்!
அதுவும் என் கை கோர்த்து
சுற்றித் திரிந்தது!
உலகை அது பார்த்தது!
நான் அதை மட்டுமே பார்த்தேன்!
அதை கடந்து
ஓர் உலகு இருப்பதை
மறந்தே போனேன்...
இருவரும் ஒரு நாள்
புதைக் குழியில் விழுந்து கிடக்கும் வரை!
அப்பவும் நம்பினேன்
கண்ணாடி கெடுதல் செய்யாதென..!
மூச்சு முட்டியது!
அய்யோ என் கண்ணாடியும் மூழ்குதே...
தவித்தேன்..!
அதை காப்பாற்றும் வேகத்தில்
நானும் வெளியேறி
அதையும் இழுத்து வெளியே போட்டேன்!
உடைந்து நொறுங்கியது..!
ஒவ்வொரு சில்லாய்
ஓடி பொறுக்கினேன்!
குத்தி கிழித்தது!
பொறுத்துக் கொண்டேன்..!
காயங்கள் அதிகமாயின..!
ஆனாலும் தொடர்ந்தேன்..!
ஒரு கட்டத்தில்...
ரணத்தின் வலி பொறுக்க முடியாமல்
போதுமென நிறுத்தினேன்..!
எதிர்பாராத ஒரு நொடியில்
முழு வடிவம் பெற்று
சிரித்தது கண்ணாடி..!
ஆறாத காயங்களின் வலி ஒரு புறம்
மீண்டும் உடைந்து விடுமோ
என்ற பதட்டம் மறுபுறம் என
என் சிரிப்பை எல்லாம்
வழித்து துடைத்து
தின்று செரித்தது அறியாமலேயே
மகிழ்ச்சியாய்
சிரிக்கிறது கண்ணாடி!
அதன் பிரதிபலிப்பாய்
உயிரற்று சிரித்து
கண்ணாடியின் கண்ணாடியாய்
மாறிப் போனேன் நான்!